முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
வாதம்

மூளைச் செயல்பாட்டின் சீர்குலைவு மிக வேகமாக வளர்ந்துகொண்டே போவதைத்தான் வாதம் என்கிறோம். அந்தப் பகுதிக்கு ரத்தம் செல்வது தடைப்படும்போது, இது 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்போது வாதம் வருகிறது. அல்லது மரணம் நேரிடும். நினைவிழப்பதும் தசைகள் செயல்படாமல் போவதும்தான் வாதத்தின் அறிகுறிகள். 24 நேரத்திற்குக் குறைவாக இது இருந்தால் அதனை டிரான்ஸியென்ட் இஸெமிக் அட்டாக் (டிஐஏ) என்கிறார்கள். ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, இடம் ஆகியவற்றைப் பொறுத்து பாதிப்பு, அறிகுறிகள் ஆகியவை ஏற்படும். நரம்பியல் ரீதியான பிரச்சினைகளிலேயே வாதத்திற்குத்தான் முதலிடம். இதைத்தான் மிக அவசரமாகவும் கவனித்தாக வேண்டும். வயதானவர்களுக்கு ஏற்படும் நரம்புக் கோளாறுகளில் பாதிப் பேருக்கு இந்த பாதிப்புதான் ஏற்படுகிறது. மரணத்தை ஏற்படுத்தும் முதல் 3 காரணங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கை முழுக்க நடமாட முடியாமல் செய்யும் கோளாறுகளில் இது முதலிடம் வகிக்கிறது. வாதம் ஏற்பட்டவர்களில் பாதிப் பேர் பாதிப்பு ஏபட்ட முதல் ஆண்டிலேயே இறந்துவிடுகிறார்கள். மூன்றில் ஒரு பங்கினரே மீண்டெழுகிறார்கள்.

மூளையின் ரத்தக் குழாய்களிலும் ரத்த ஓட்டத்திலும் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளால் உருவாகும் நோய்க் குறியே வாதம். ரத்தம் அடைத்துக்கொள்வதாலோ, உறைந்துவிடுவதாலோ வாதம் ஏற்படலாம். வாதம் ஏற்படுபவர்களில் 70-80 சதவீதம் பேருக்கு ரத்தக் குழாய் அடைப்பினாலேயே வாதம் ஏற்படுகிறது. ரத்த ஓட்டத்திற்குத் தடை ஏற்படும் இடத்தில் ரத்தம் உறைந்துவிடுவது, வேறெங்காவது உறைந்த ரத்தம் ஏற்படுத்தும் அடைப்பு இதற்குக் காரணமாக அமையலாம். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பினால், மூளையின் ரத்தக் குழாய்கள் குறுகி ஏற்படும் அடைப்பால் உருவாகும் வாதம்தான் பொதுவாக பலருக்கு ஏற்படும். வேறெங்காவது ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் பிரச்னை இதய நோய் இருப்பவர்களுக்கு ஏற்படும். 20-30 சதவீதம் பேருக்கு ரத்தக் கசிவினால் வாதம் ஏற்படும். மூளைக்குள் ரத்தக் குழாய்கள் கிழிவதால் இது ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம்தான் வாதத்திற்கான மிக முக்கியமான காரணம். வயது அதிகரித்தல், பாரம்பரியம், அதிகக் கொழுப்பு,. அதிக எடை, புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மை, இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவை பிற காரணங்கள்.

பரிசோதனை மற்றும் சமாளித்தல்

வாதம் ஏற்பட்டால் அதை எப்போதுமே மருத்துவமனையில்தான் பரிசோதிக்க வேண்டும். கோளாறு, அதற்கான காரணம் ஆகியவற்றை இந்தப் பரிசோதனைகளில் கண்டறிய வேண்டும். இதன் மூலம் குணப்படுத்தக்கூடிய ரத்தக் குழாய் பிரச்சினைகளையும் குணப்படுத்தக்கூடிய பிற காரணங்களையும் கண்டறியலாம். இதைக் கண்டுபிடிக்க ரத்தம், ஈசிஜி, எக்ஸ்ரே ஆகியவை உதவும். வாதத்திற்கான காரணத்தைக் கண்டறியும் சிகிச்சையில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவை மிகவும் நுணுக்கமான சோதனைகளாகும். காரோடிட் அல்ட்ரா சவுண்ட் டோப்லர் ஆய்வுகள் டிஐஏ உள்ள நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் காரோடிட் ஆதெரோஸ்லெரொசிஸ் (ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து குழாய் குறுகிவிடும் பிரச்சினை) பிரச்சினையைக் கண்டுபிடிக்க உதவும்.

வாத நோயைச் சமாளிக்கும்போது, முடக்கத்தைக் குறைக்க மருத்துவம், மிக மோசமான பாதிப்பிற்கு மருத்துவம், பாதிப்பைக் குறைக்க மறுவாழ்வுச் சிகிச்சை, உடல் ஊனத்தைக் குறைக்க அந்தச் சூழலுக்கு பழகுதல் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வாதத்தைத் தடுக்க, வாதத்தை ஏற்படுத்தக்கூடியவற்றை, அதாவது உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், கொழுப்பு ஆகியவற்ரைக் குறைக்க வேண்டும். டிஐஏ இருந்தால் ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மறுவாழ்வு

நோயாளிக்கும் அவரது குடும்பத் தினருக்கும் இது குறித்த கல்வி, பயிற்சி, ஆலோசனை ஆகியவை தேவை. ஒரு சமூகத்தில் இணைந்து வாழும் வாத நோயாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மறுவாழ்வு சேவைகளைச் செய்து தர வேண்டும். பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியைக் கண்டறிவது, மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, சுதந்திரமாகச் செயல்படுவதை அதிகரிப்பது ஆகிவைதான் வாத நோயாளிக்கு மறுவாழ்வளிக்கும்போது கவனிக்க வேண்டியவை. நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், நோயாளியின் உடல், மன நிலையைப் புரிந்துகொண்டு மறுவாழ்வு உதவிகளைச் செய்ய வேண்டும்.

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.