உங்கள் பற்குழியைக் கவனித்தல்
ஆரோக்கியமான பற்குழி என்பது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்ல தோற்றத்திற்கு அடையாளம். ஆனால், நாம் பற்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான கவனம் செலுத்துவதில்லை. இதனால், நிரந்தரமாகப் பற்களை இழந்து வாழ வேண்டியிருக்கிறது.
இயற்கையான பற்கள் இருக்கும்வரை கிருமிகளின் காரணமாக பற்கள் சேதமடைவது நடந்துகொண்டேதான் இருக்கும். குழந்தைகளைப் போலவே, பெரியவர்களின் பற்களுக்கும் ஃப்ளோரைடு மிக அவசியமாகும். ஃப்ளோரைடு சேர்க்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது போக, ஃப்ளோரைடு இருக்கும் பற்பசைகளையும் வாயைக் கழுவும் திரவங்களையும் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்.
வயதான காலத்தில் பற்கள் விழுவதற்கு மிக பொதுவான காரணம், எகிறு வீக்க நோயாகும். பற்கறைகள் தொடர்ந்து படிவதால் இது ஏற்படுகிறது. இந்நோய் ஏற்படாமல் தடுக்க, தினமும் பற்களைத் துலக்குவதன் மூலம் பற்கறையை அகற்ற வேண்டும். உங்கள் பற்களையும் எளிறுகளையும் தொடர்ந்து பரிசோதித்து வந்தால், ரத்தம் கசிதல், வீங்குதல், சிவந்திருத்தல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளைக் காணலாம்.
எப்படிப் பல் துலக்குவது என்று தெரிந்துகொள்வது பற்களை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்வதன் மிக முக்கியமான பகுதி. தினமும் கவனமாகப் பல் துலக்கினால், பற்களின் மீது தொடர்ந்து படியும் பற் காரையை நீக்க முடியும். மென்மையான இழைகளைக் கொண்ட பிரஷ்ஷையும் ஃப்ளோரைடு கொண்ட பற்பசையையும் பயன்படுத்தி மெதுவாக எல்லாப் பக்கங்களிலும் துலக்கவும். பிரஷ்ஷைச் சுழற்றியும் முன்னும் பின்னும் பல் துலக்க வேண்டும். எளிறுகளைச் சுத்தம் செய்யும்போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் நாக்கையும் சிறிது ப்ரெஷ் செய்தால், அது கறையை நீக்க உதவுவதோடு, உணவுத் துணுக்குகளையும் நீக்க உதவும். உங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
வாய் உலர்ந்து போய் தாகம் எடுப்பது, அடிக்கடி ஏதாவது திரவத்தைக் குடிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படுவது வயதான பலருக்கு ஏற்படும் பிரச்னைதான். சாப்பிடுவது, விழுங்குவது, சுவைப்பது, பேசுவது போன்றவற்றிற்கு இது சிரமமேற்படுத்தும். இந்த வாய் வறட்சி என்பது உமிழ் நீர் சுரப்பிகள் சரியாக செயல்படவில்லையென்றால் ஏற்படும் ஒரு பிரச்னை. ஏதேனும் மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவாகக்கூட இருக்கலாம். கூடவே சில உடல் நலப் பிரச்னைகளும் தோன்றலாம். எளிறு நோய், பற் சிதைவு போன்றவற்றை ஏற்படச் செய்வதன் மூலம் வாயின் ஆரோக்கியத்தையும் இந்த வாய் வறட்சி பாதிக்கும். இந்த வறட்சியிலிருந்து விடுபட, கூடுதலாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இனிப்புகள், காஃபீன் இருக்கும் பானங்கள், புகையிலை, ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை வாயின் வறட்சியை அதிகரிக்கும். எந்த மருந்தினால் இந்தப் பிரச்னை ஏற்பட்டதென்று அறிய நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
நீங்கள் பொய்ப் பற்கள் அணிபவராக இருந்தால் அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவுத் துணுக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், அதில் நிரந்தரமான கறைகள், வாய் நாற்றம், எளிறுகளில் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம். தினமும் ஒரு முறை அந்தப் பற்களின் எல்லாப் பகுதியையும் அதற்காக உள்ள கருவியினால் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் தூங்கும்போது உங்கள் பற்களைக் கழற்றி அவற்றை தண்ணீரிலோ, பற்களைச் சுத்தம் செய்யும் திரவத்திலோ போட்டு வையுங்கள். காலை, சாப்பாட்டிற்குப் பிறகு, படுக்கச் செல்வதற்கு முன் உங்கள் வாயை வெதுவெதுப்பான உப்பு தண்ணீரால் கழுவுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சில பற்களை மட்டுமே பொய்ப் பற்களாகக் கட்டியிருந்தாலும் முழுப் பற்களை சுத்தம் செய்வது போலவே இவற்றையும் கவனிக்க வேண்டும். இந்தப் பற்களைப் பொருத்தும் இடத்திலும் பாக்டீரியாக்கள் சேரக்கூடும். இந்தப் பகுதியை முழுமையாகச் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.
வாயில் இருக்கும் சதைகளின் வளர்ச்சிக்கு ஏற்பப் பொய் பற்களை மாற்ற வேண்டும் அல்லது சரி செய்ய வேண்டும். இந்தப் பற்களை வீட்டிலேயே சரி செய்ய நினைக்காதீர்கள். அதனால், பற்கள் சேதமாகக்கூடும். அதைப் பயன்படுத்தும்போது, வாயின் தசைகளுக்கும் காயம் ஏற்படலாம்.
வாயில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் பற்கள், உண்மையான பற்களைப் போலவே தோற்றம் கொண்டவை. அறுவை சிகிச்சை மூலம் அவை எளிறுகளில் நுழைக்கப்படுகின்றன. அல்லது தாடை எலும்பில் பொருத்தப்படுகின்றன. சரியான எலும்பு அமைப்பு இருப்பவர்களுக்குத்தான் இப்படி அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியும். இதற்கு மிகுந்த நிபுணத்துவம் தேவை என்பதால் நல்ல அனுபவம் வாய்ந்த பல் மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும். அவருடன் இந்த முறை நமக்கு உகந்ததுதானா என்பதைக் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.