முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமை

சிறுநீரை அடக்க இயயாமை என்பது வயதானவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வரும் பொதுவான பிரச்சினை. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 10 சதவீதம் பேருக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. சிறிய அளவிலான அசௌகரியத்தில் ஆரம்பித்து, மிக மோசமாகக் கட்டுப்படுத்த முடியாமை வரை இந்தப் பிரச்சினையின் தீவிரம் இருக்கும். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்தே விலகியிருக்கும் சூழல் ஏற்படும்.

நோயாளியும் அவரைப் பார்த்துக்கொள்பவர்களும் இதற்குக் கிடைக்கக்கூடிய சிகிச்சை முறை பற்றித் தெரிந்துகொள்ளாமல், தேவையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். உண்மையில், தகுந்த சிகிச்சையளித்தால், இந்தப் பிரச்சினையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும்.

சிறுநீரை அடக்க முடியாமை என்பது வயதானால் வரும் தவிர்க்க முடியாத பிரச்சினை அல்ல. சில குறிப்பிட்ட நோய்களாலும் மருந்துகளாலும் ஏற்படும் விளைவு. உடல் நலமின்மை, பலவீனம், குழப்பம், மருத்துவமனையில் இருப்பது ஆகியவற்றால் இந்தப் பிரச்சினை ஏற்படும். அல்லது சிறுநீர்ப் பாதை தொற்றுக்கான ஒரே அறிகுறியும் இந்தப் பிரச்சினைதான். தீராத சிறுநீர் அடக்க முடியாத பிரச்சினை பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

  • அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் சிறுநீர் அடக்க முடியாமை. உடற்பயிற்சி செய்யும்போது, இருமும்போது, தும்மும்போது, சிரிக்கும்போது அல்லது வேறு ஏதாவது உடல் செயல்பாடுகளின்போது சிறுநீர்ப் பை அழுத்தப்பட்டு இப்படி நிகழ்கிறது. எல்லா வயதுப் பெண்களுக்கும் இம்மாதிரி பிரச்சினை வரக்கூடும்.
  • அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதல் அல்லது கழிப்பறையை அடையும்வரை பொறுத்திருக்க முடியாமல் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை. பார்கின்சன் நோய், வாதம், டிமென்சியா போன்றவற்றால் இது ஏற்படலாம். எலும்புத் தேய்வு பிரச்சினை இருப்பவர்கள் கழிப்பறையை அடைவதற்கு நேரம் ஆகலாம். இதனால், சாதாரணமான சிறுநீர் அழுத்தத்தைக்கூடத் தாங்க முடியாமல் சிறுநீர் கழித்துவிடலாம். வயதானவர்களுக்கு சாதாரணமாகவே இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
  • புரோஸ்டேட் சுரப்பி வீங்கியவர்களுக்கும் நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் சிறுநீர்ப் பை தொடர்ந்து நிரம்பியிருந்தால் சிறிய அளவில் சிறுநீர் கசிவது இருக்கும்.

பரிசோதனை மற்றும் சமாளித்தல்

இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதில் மிக முக்கியமான கட்டம் மருத்துவ ரீதியாக இதன் காரணத்தை அறிவதுதான். பெரும்பாலான நோயாளிகள் ஒரு சிறுநீரக சிறப்பு மருத்துவர் (சிறுநீர்ப் பாதை நோய் சிறப்பு மருத்துவர்) அல்லது பெண்மைப் பிணியியல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

பரிசோதனை முடிவுகளை வைத்து இதற்கான சிகிச்சை இருக்கும். ஆக்ஸிபுடினின் (ட்ரோபான்) கூடிய மருந்தளிப்பது நல்ல பலனளிக்கும். ஆனால், வாய் வறட்சி, க்ளூகோமா, சிறுநீரை நிறுத்திவைத்தல் போன்ற பின் விளைவுகள் ஏற்படலாம்.

புரோஸ்டேட் சுரப்பி வீங்கியிருப்பது போன்ற உடல் அமைப்பு பிரச்னை காரணமாக சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத பிரச்னை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்யலாம்.

உடற்பயிற்சி இடுப்பு தசைகளை உறுதிப்படுத்துவதால், சிறுநீர்ப் பையிலிருந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் “சிறுநீர்ப் பை பயிற்சி” மிகவும் உதவும். இந்த முறைகளின் மூலம் சிறுநீர்ப் பை நிரம்புவதை அறியும் தன்மை அதிகரிக்கும். இதனால் கழிப்பறைக்கு முன்கூட்டியே செல்ல முடியும்.

சில சமயங்களில் கேதீட்டரை (வளையக்கூடிய ரப்பர் குழாய்) சிறுநீர்க் குழாயில் நுழைத்து குறிப்பிட்ட கால அளவில் சிறுநீரை வெளியேற்றுவதன் மூலம் இதற்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அல்லது நிரந்தரமாகவே கேதீட்டரை சிறுநீர் பையோடு இணைத்துவிடலாம். ஆனால், நீண்ட நாள் கேதீட்டரைப் பயன்படுத்துவதனால், சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படலாம்.

மேலே குறிப்பிட்ட எந்த வழிமுறையும் பயன்படாத நோயாளிகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, ஈரத்தை உறிஞ்சும் உள்ளாடைகளை அணியலாம். ஆனால் இதற்கு செலவு சற்று அதிகம் பிடிக்கும்.

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.